வீட்டு தோட்ட தொழில்
எளிமையான முறைகளில் வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறைகள் குறித்து முன்னோடி வீட்டுத்தோட்ட விவசாயிகளின் அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கடந்த இதழ்களில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து, ‘வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த சில வழிகாட்டுதல்களையும் சமையலறை காய்கறிக் கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு தயாரிப்பு முறை குறித்தும் இங்கு விவரிக்கிறார், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானி முனைவர் வெங்கடாசலம்.
நேரம் ஒதுக்குவது அவசியம்!
“வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான நேரத்தையும் ஒதுக்கவேண்டும். அதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளதா? என்பதை முடிவு செய்த பிறகு தோட்டம் அமைக்கவேண்டும். வெறும் ஆர்வத்தில் வீட்டுத்தோட்டத்தை அமைத்து விட்டு, சரியான பராமரிப்பும் கண்காணிப்பும் செய்யவில்லை என்றால், அது விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடும். மேலும் வீட்டுத்தோட்டத்தை இரண்டு வகைகளில் அமைக்கலாம்.
ஒன்று தரைப்பகுதியில் அமைக்கப்படும் புறக்கடைத்தோட்டம். மற்றொன்று தொட்டிகளில் செடி வளர்க்கும் மாடித்தோட்டம். வீட்டின் தரைப்பகுதியில் போதிய இட வசதியும், மண் வளமும் இருந்தால் புறக்கடைத் தோட்டம் அமைக்கலாம். போதிய இடவசதி இல்லாதவர்கள் மாடித்தோட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
தோட்டம் அமைத்த பிறகு, நமது பகுதியின் தட்பவெட்ப நிலைக்கு எந்த காய்கறிகள் நன்கு வளரும் என்பதை அறிந்து அதை மட்டும் சாகுபடி செய்ய வேண்டும். மாறாக, மலைக்காய்கறிகள், வெளிநாட்டுச் செடிகள் என அந்தப்பகுதிக்கு சற்றும் பொருந்தாத தாவரங்களை வளர்க்க ஆசைப்படக்கூடாது. அப்படி அவற்றை வளர்த்தாலும் அது வளர்ச்சி குறைந்த செடியாகவே இருப்பதுடன், நோய்தாக்குதலுக்கு உள்ளாகி முழுமையான மகசூல் கிடைக்காது. சிலர் பரிசோதனை முயற்சியாக இதைச் செய்து பார்க்கிறார்கள். 100 சதவிகிதம் யாரும் வெற்றி பெறவில்லை. எனவே நாட்டுக் காய்கறிகளை நடவு செய்தால் போதுமானது.
ஆர்வம் காரணமாக கிடைத்த செடிகளையெல்லாம் கொண்டு வந்து இடைவெளி இல்லாமல் நடக்கூடாது. நம் குடும்பத்தின் தேவைக்கு மட்டும் காய்கறி உற்பத்தி செய்யலாமா... அல்லது உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுக்கும் விதமாக தோட்டம் அமைக்கலாமா... இல்லை வீட்டுத்தோட்ட காய்கறிகளை வெளியில் விற்பனை செய்து காசு பார்க்கலாமா? என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டு அதன்படி தோட்டம் அமைக்கலாம். அதற்கான தண்ணீர் வசதியையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டுத்தோட்டத்தில் சிலர் காய்கறிகளுடன் சேர்த்து பல்வேறு மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், மூலிகைச் செடிகளின் மருத்துவகுணத்தை அறிந்து பயன்படுத்தும் முறையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்... நமக்கு உபயோகமான செடிகளை மட்டும் வளர்க்க வேண்டும். தேவையில்லாத செடிகளைத் தவிர்ப்பதன் மூலம் தண்ணீர் விரயத்தைத் தவிர்க்கலாம். குறிப்பாக அழகுச்செடிகள் கூட தவிர்க்க வேண்டியவைதான். இவை நமது நேரத்தையும் வீணடிக்கும்.
சமையலறைக் கழிவில் எரிவாயு!
வீட்டுத்தோட்டத்தில் காய்ந்த இலை, நீர் உள்ளிட்ட கழிவுகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இவற்றோடு சமையலறைக் கழிவுகளையும் சேர்த்து இயற்கை உரங்கள் தயாரித்து, வீட்டுத்தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம். ஒரு நாளுக்கு 5 கிலோ அளவில் கழிவுகள் கிடைத்தால்... அதைப் பயன்படுத்தி பயோகேஸ் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், 30 சதவிகிதம் சமையல் எரிவாயுச் செலவை மிச்சப்படுத்தலாம். தொடர்ந்து, பயோகேஸ் உபகரணத்தில் இருந்து வெளியேறும் கழிவைக் கொண்டு ஊட்டமேற்றிய உரம் தயாரிக்கலாம். தரைப்பகுதியில், மாடியில் இடவசதி உள்ளவர்கள் பயோகேஸ் உற்பத்தி செய்யமுடியும். இதற்கான எரிவாயுக்கலன்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள், பரவலாகக் கடைகளில் கிடைக்கின்றன. வீட்டுத் தோட்டத்துடன், ஓரிரு தேன் பெட்டிகளை வைத்து நமது குடும்பத்துக்குத் தேவையான தேனை அறுவடை செய்யலாம். தேனீக்களால் அயல் மகரந்தசேர்க்கை ஏற்படுவதால், பூக்கும் தன்மை கொண்ட எல்லாவகைச் செடிகளிலும் கூடுதலான மகசூல் கிடைக்கும்.
வியாபார வாய்ப்புகள்!
வீட்டுத்தோட்டத்தில் நல்ல அனுபவம் பெற்ற குடும்பத்தலைவிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் இணைந்து பயிற்சி மற்றும் வகுப்புகள் எடுக்கலாம். அதற்கான ஊக்கதொகையும் கணிசமாகக் கிடைக்கும். புதிதாக வீட்டுத்தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களுக்கு தோட்டம் அமைத்துக் கொடுக்கலாம், தொடர் பராமரிப்புப் பணிகளையும் செய்து கொடுத்து வருமானம் பார்க்கலாம். வீட்டுத்தோட்டங்களுக்குத் தேவையான விதைகளை நாமே உற்பத்தி செய்து விற்கலாம். குழித்தட்டுகளில் நாற்றுகளை வளர்த்து விற்பனை செய்தும் வருமானம் பார்க்கலாம். வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்குத் தேவையான மண்புழு உரம், மூலிகைப் பூச்சி விரட்டிகள், பஞ்சகவ்யா உள்ளிட்ட இயற்கை இடுபொருட்களைத் தயாரித்துக் கொடுப்பதன் மூலமாகவும் வருமானம் பார்க்கலாம்”
இனி வரும் காலம், இயற்கையின் காலம்!
பல பயனுள்ள தகவல்களை அடுக்கிய வெங்கடாசலம் நிறைவாக, “வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த விழிப்பு உணர்வு வேகமாகப் பரவி வருகிறது. புதிதாக வீடு கட்டுபவர்கள் கூட மாடியில் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான வடிவமைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டு மாடியிலும் தோட்டம் இருக்கும். அதில் முழுக்க முழுக்க இயற்கைக் காய்கறிகள் விளையும் வாய்ப்பு அதிகமுள்ளது. இனி வரும் காலம் இயற்கையின் காலம் எனில் அது மிகையில்லை” என்றார், மகிழ்ச்சி பொங்க.

nice article... May i know any training is given in erode about maadi thottam
ReplyDeleteNICE useful information
ReplyDeleteAdmiring the time and effort you put into your website and in depth information you present. It’s good to come across a blog every once in a while that isn’t the same old rehashed information. Wonderful read! I’ve bookmarked your site and I’m adding your RSS feeds to my Google account. https://businessbooks.cc/business-plan-cover-page/
ReplyDelete